search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமன் ஜெயந்தி"

    அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். #NamakkalAnjaneyar #HanumanJayanti
    நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டு தோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இன்று (சனிக்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை நடந்தது. காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்த விழாவில் நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேரம் ஆக, ஆக பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்தார்கள்.

    அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி பக்தர்கள் சார்பில் ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெறுவது போல் பிரமாண்டமான மலர் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. சுமார் ரூ. 3.5 லட்சம் செலவில் 1½ டன் எடையுள்ள ரோஜா, மல்லிகை, முல்லை உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.



    இதேபோல் சாமிக்கு இடது புறம் மற்றும் வலது புறத்தில் யானை உருவத்தை மலர்களால் அலங்காரம் செய்து இருந்தனர். இது மிகவும் தத்ரூபமாக இருந்தது.

    அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாமக்கல் நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    அதன்படி நாமக்கல் பஸ்நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருச்செங்கோடு, ராசிபுரம், கோவை உள்ளிட்ட மார்க்கமாக செல்லும் பஸ்கள் மணிக்கூண்டில் இருந்து பரமத்தி சாலை வழியாக வள்ளிபுரம் பை-பாஸ் சென்று, அங்கிருந்து நல்லிபாளையம் பை-பாஸ் வழியாக சென்றது.

    நகருக்குள் வரும் பஸ்கள் வழக்கமான மார்க்கத்தில் வந்து சென்றன. கோட்டை சாலையில் அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. #NamakkalAnjaneyar #HanumanJayanti
    அனுமன் அவதரித்தது மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் என்பதால், அன்றைய தினம் விரதம் இருந்து அனுமனுக்கு விருப்பமான ராம நாமத்தை ஜெபித்து வழிபடுவது சிறப்பு தரும்.
    இந்து மதத்தில் பல தெய்வ வழிபாடுகள் இருப்பினும் சிவன், விஷ்ணு, அம்பாள் வரிசையில் பல ஆலயங்களைக் கொண்டவராக ஆஞ்சநேயர் திகழ்கிறார். மற்ற எந்த தெய்வங்களுக்கும் இல்லாத சிறப்பு அனுமனுக்கு உண்டு. இறைவனின் பக்தனான ஒருவரையும், அதிகமான மக்கள் பக்தியுடன் வழிபடுகிறார்கள், ஆலயங்கள் அமைத்திருக்கிறார்கள், அதுவும் ராமரின் அருளைப் பெற இவரையே வணங்க வேண்டும் என்பது போன்றவையே இவரை தனிச் சிறப்புடன் காட்டுகிறது.

    அனுமனின் அவதாரம், மும்மூர்த்திகளில் முதன்மையானவரான சிவபெருமானுடனும், பல அவதாரங்கள் எடுத்த விஷ்ணுவுடனும் சம்பந்தப்பட்டுள்ளது.

    அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது எழுந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமானின் விஸ்வரூப தரிசனம் நிகழ்ந்த அதே வேளையில், மகாவிஷ்ணுவின் கூர்ம அவதாரமும் நிகழ்ந்தது. பூமிக்கடியில் அசுரர்களால் மறைத்து வைக்கப்பட்ட நான்கு வேதங்களையும் மீட்கும் பொருட்டு நிகழ்ந்த இந்த கூர்ம அவதாரத்தில் பூமியைத் தோண்டியபடி வேகமாக செல்ல, திடீரென்று தட்டுப்பட்ட சிவபெருமானின் பாதங்களைத் தொட்டு மீண்டது விஷ்ணுவின் கரங்கள்.

    உடனே சிவபெருமான் தன் விஸ்வரூபத்தைச் சுருக்கி, “நாம் இருவருமே தெய்வ நிலையில் இருக்கிறோம். அப்படியிருக்க உன் கரங்கள் என் பாதங்களை ஸ்பரிசம் செய்வதா? அறியாமல் செய்தது என்றாலும், முறையாதனல்ல. இதற்கு நானும் ஏதேனும் உனக்கு உபகாரமாக இருக்க வழி செய்ய வேண்டும்” என்றார்.

    சிவபெருமானின் கோரிக்கையை தட்ட முடியாத நாராயணன், “என் அவதாரங்களுள் மிக பெருமை வாய்ந்த ராம அவதாரத்தின் போது, எதிரிகளை வெல்ல அசகாய பலம் படைத்த வீரனாய், எனக்கு தாங்கள் உதவ வேண்டும் ஈஸ்வரனே” என்றார்.

    அந்த ஒப்பந்தத்தின் படிதான், சிவனை நினைத்து காற்றை மட்டும் சுவாசித்து கடுந்தவம் புரிந்த அஞ்சனைக்கு, வாயுவின் அருளால் சிவசக்தி அம்சம் கொண்ட கனி கிடைத்தது. அதை உண்ட அஞ்சனை சிவனின் சக்தியைக் கொண்ட பராக்ரமசாலியான ஆஞ்சநேயர் பிறந்தார் என்கிறது புராணம்.

    அனுமன் அவதரித்தது மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் என்பதால், அந்த நாள் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து அனுமனுக்கு விருப்பமான ராம நாமத்தை ஜெபித்து விட்டு, அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது சிறப்பு தரும்.

    ‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
    வாயு புத்ராய தீமஹி
    தந்தோ ஹனுமன் பிரசோதயாத்’

    இந்த அனுமன் காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து அனுமனை வழிபடுபவர்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுவார்கள்.
    ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகள் அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக வடைகள் தயாரிக்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 5-ந் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

    விழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வடைகள் தயாரிக்கும் பணி அங்குள்ள பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த 32 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகள் அணிவிக்கப்படுகிறது. இதற்கு தேவையான வடைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

    இந்த வடைகளை தயாரிக்க 2,250 கிலோ உளுந்தம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. மேலும் 650 கிலோ நல்ல எண்ணெய், 35 கிலோ மிளகு, சீரகம், உப்பு ஆகியவை பயன் படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×